புதிய 'பார்க்கிங்' கொள்கை அமலாகிறது: பெங்களூருவில் வீடுகள் முன்பு வாகனம் நிறுத்தினால் வரி
பெங்களூருவில் புதிய ‘பார்க்கிங்' கொள்கையை அமல்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:
போக்குவரத்து நெரிசல்
பெங்களூரு நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன. அதனால் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று பெருமை பெங்களூருவுக்கு உண்டு. நகருக்கு பூங்கா நகர் என்ற அடைமொழியும் இருக்கிறது. புதிதாக வேலை தேடுவோருக்கு அடைக்கலம் வழங்கும் நகரமாகவும் திகழ்கிறது. அத்தகைய பெங்களூருவில் 1¼ கோடி மக்கள் வசிக்கிறார்கள். இந்த மக்கள்தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது நகரில் 1 கோடி வாகனங்கள் ஓடுகின்றன.
அதனால் பெங்களூரு சாலைகள் வாகன நெரிசலால் விழிபிதுங்கி நிற்கின்றன. எந்த சாலையில் சென்றாலும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளை எரிச்சலடைய செய்கிறது. மாணவர்கள், அலுவலகம் செல்வோர், ஆஸ்பத்திரிக்கு செல்வோர் என யாரும் குறித்த நேரத்திற்கு செல்ல முடிவது இல்லை. அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகின்றன.
மெட்ரோ ரெயில்
இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது என்பது குதிரை கொம்பாக உள்ளது. இந்த வாகன நெரிசல் நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இந்த மெட்ரோ ரெயில் சேவை சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த மெட்ரோ ரெயில் சேவை கடைகோடியில் உள்ள பகுதிக்கும் கிடைத்தால் மட்டுமே வாகன நெரிசல் பிரச்சினைக்கு முழுமையான தீர்பு கிடைக்கும். பறக்கும் பஸ் சேவை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
மேம்பாலங்கள் கட்டுவது, சுரங்க பாதைகள் அமைப்பது போன்ற பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் வாகன நெரிசல் பிரச்சினை தீரவில்லை. இந்த வாகன நெரிசல் பிரச்சினையால் பலர் பெங்களூருவை விட்டு வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்த நிகழ்வுகளும் உண்டு. இந்த வாகன நெரிசலால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த வாகன நெரிசல் பிரச்சினைக்கு முக்கியமான காரணங்களில் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் ஒன்று.
இயக்க முடியாத நிலை
அதாவது நகரில் பெரிய வணிக வளாகங்கள், அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அங்கு வரும் பொதுமக்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். அதனால் தான் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தாலும், சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க முடியவில்லை.
மேலும் வாகன ஓட்டிகள் தங்கள் வீட்டின் முன் பகுதிகளில் உள்ள தெருக்களில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி கொள்கிறார்கள். இதனாலும் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதே நிலை நீடித்தால் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகும் என்றும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் வாகனங்களை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் நிபுணர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பார்க்கிங் கொள்கை
இந்த நிலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்யும் நோக்கத்தில் பெங்களூரு மாநகராட்சி கடந்த 2012-ம் ஆண்டு புதிய பார்க்கிங் கொள்கையை கொண்டு வந்தது. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி அந்த பார்க்கிங் கொள்கையை தற்போது அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 15 நாட்களுக்குள் விருப்பம் உள்ள நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. சட்டப்படி டெண்டரில் கலந்து கொள்ள 40 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், "பெங்களூரு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் ஏ, பி, சி, டி, என்று பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என்றார்.
கட்டணம்
கார்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வரையும், மூன்று சக்கர வாகனங்களுக்கு அதை விட சற்று குறைவான கட்டணமும் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுமா? என்று தெரியவில்லை. ஆனால் பெங்களூரு மாநகராட்சி பகுதியில் விரைவில் புதிய பார்க்கிங் கொள்கை அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.