ஆசிரியர் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது; சி.பி.ஐ. நடவடிக்கை


ஆசிரியர் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
x

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வை சி.பி.ஐ. இன்று காலை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி.

இவர், கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வி துறை மந்திரியாக செயல்பட்டபோது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. அமைப்புக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்க துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த ஆண்டு அமலாக்க துறையினர் 27 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர். மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.

இது மேற்கு வங்காள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சகத்தில் இருந்து பார்த்தா சாட்டர்ஜியை நீக்க வேண்டும் என்று கட்சியில் கோரிக்கை வலுத்தது. இந்த ஊழல் வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் எம்.எல்.ஏ.வான மாணிக் பட்டாச்சார்யா என்பவரையும் சி.பி.ஐ. கைது செய்து இருந்தது.

இந்த நிலையில், ஆசிரியர் பணிநியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான ஜிபன் கிருஷ்ண சஹா என்பவரை சி.பி.ஐ. இன்று காலை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3-வது எம்.எல்.ஏ. இவர் ஆவார். புர்வான் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின்போது, மத்திய பாதுகாப்பு படையும் உடன் சென்றன.

9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கான ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் வேலை உத்தரவாதம் வழங்கி, பலரிடம் பணம் சேகரித்து உள்ளார் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

சி.பி.ஐ. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் விசாரணைக்கு உரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டியவர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் பெயருக்கு பக்கத்தில் குறிப்பிடப்பட்ட பணம் ஆகியவை கொண்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன என சி.பி.ஐ. அமைப்பு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ. கிருஷ்ண சஹாவை அதிகாரிகள் இன்று கைது செய்து உள்ளனர்.


Next Story