தொடரும் குழப்பம்; மகாவிகாஸ் அகாடி அரசில் இருந்து விலக தயார் - சிவசேனா


தொடரும் குழப்பம்; மகாவிகாஸ் அகாடி அரசில் இருந்து விலக தயார் - சிவசேனா
x
தினத்தந்தி 23 Jun 2022 4:53 PM IST (Updated: 23 Jun 2022 5:51 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி அரசில் இருந்து விலக தயார் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார்.

இதனால், மராட்டியத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று இரவு அரசு இல்லத்தில் இருந்து வெளியேறி தன் சொந்த வீட்டிற்கு திரும்பினார்.

அதேவேளை, கவுகாத்தியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் மும்பைக்கு வரும்படி சிவசேனா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் அமைத்துள்ள கூட்டணியை சிவசேனா முறித்துக்கொள்ள வேண்டுமென அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டணி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிவசேனா கட்சி தலைவர்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்ததாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளருமான எம்.பி. சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சஞ்சய் ராவத், மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேற நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மும்பைக்கு வர வேண்டும்' என்றார்.


Next Story