இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர் தெலுங்கானா காங்கிரஸ் வாக்குறுதி
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே தெலுங்கானாவில், மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் இலவசமாக தருவோம் என்று கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அங்குள்ள காங்கிரஸ் கட்சி.
ஐதராபாத்,
கர்நாடகாவில் நாளை (புதன்கிழமை) சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதா கட்சி, தினமும் அரை லிட்டர் பால்பாக்கெட் மற்றும் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் சார்பில், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம், மற்றும் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டன.
இந்த அறிவிப்புகள் அங்கு தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்தன. இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே தெலுங்கானாவில், மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் இலவசமாக தருவோம் என்று கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அங்குள்ள காங்கிரஸ் கட்சி.
கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெலுங்கானா வந்துள்ள நிலையில், அவரது முன்னிலையில் 'ஐதராபாத் இளைஞர் பிரகடனம்' என்ற பெயரில் இளைஞர்களுக்கான தேர்தல் திட்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதில் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும், தெலுங்கானா தனிமாநில போராட்டத்திற்காக உயிர்நீத்த இளைஞர்கள் தியாகிகளாக கருதப்படுவார்கள், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களது பெற்றோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளும் அதில் இடம் பெற்று உள்ளன. தெலுங்கானாவில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.