தெலுங்கானா: கல்லூரி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்; முதல்வர், துணை முதல்வருக்கு தொடர்பு


தெலுங்கானா:  கல்லூரி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்; முதல்வர், துணை முதல்வருக்கு தொடர்பு
x

தெலுங்கானா தனியார் கல்லூரி மாணவர் தற்கொலையில் தகாத வார்த்தை, முதல்வர் அறை முன் மணிக்கணக்கில் நிற்க வைத்து என பல கொடுமைகள் அரங்கேறி உள்ளன.



ரங்காரெட்டி,


தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நரசிங்கி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

அவர் நகுலா சாத்விக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த முடிவை அவர் ஏன் எடுத்து உள்ளார் என்பது விசாரணைக்கு பின்பே கூற முடியும் என காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

எனினும், கல்லூரி நிர்வாகம் அளித்த சித்ரவதையால் மாணவர் இந்த முடிவை எடுத்து உள்ளார் என அவரது பெற்றோர் குற்றச்சாட்டாக கூறினர். அதனால், பிரிவு 305-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

வழக்கில் கல்லூரி நிர்வாக முதல்வர் ஆச்சார்யா, துணை முதல்வர் சிவராமகிருஷ்ணா, வார்டன் நரேஷ், துணை முதல்வர் ஷோபன் பாபு கைது செய்யப்பட்டனர். மற்றொரு முதல்வர் ஜெகன் தப்பியோடி விட்டார். படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டிய ஆசிரியர்களும் துன்புறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசி வந்து உள்ளனர். வாட்ச்மேன் வேலைக்கு கூட போக முடியாது என அந்த மாணவரை நிர்வாக முதல்வர் திட்டியுள்ளார் என அதுபற்றிய விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த தற்கொலை பற்றி நடந்த விசாரணை முடிவில் வெளியான அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நகுலா சாத்விக் விடுதி கழிவறையில் தண்ணீர் வரவில்லை என கடிதம் வழியே புகார் தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, நகுலா சாத்விக் பற்றி பொதுவெளியில் அவதூறு ஏற்படுத்துவது தொடங்கியது. குடிநீர், உணவு, கழிவறை தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை பற்றி கேள்வி எழுப்பும் எந்தவொரு மாணவரையும் விடுதி வார்டன் தாக்கி பேசி வந்து உள்ளார். அந்த வகையில், அந்த மாணவரை சில சமயங்களில் தகாத வார்த்தைகளை பேசுவதுடன், அடிக்கவும் செய்து உள்ளார்.

இரண்டு முதல்வர்கள் மற்றும் துணை முதல்வரும் சேர்ந்து கொண்டு அந்த மாணவரை மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதபோன்று, முதல்வர் ஜெகன், மாணவரை கூப்பிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, வசைபாடி உள்ளார். அவரது அறை முன்பு மணிக்கணக்கில் நிற்க வைத்து உள்ளார். துணை முதல்வர், மாணவரிடம் கடுமையாக பேசி, ஏளனம் செய்ததுடன், பிற மாணவர்கள் முன்னிலையில் கேலி செய்தும் உள்ளார் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுபற்றி தனது அண்ணன் மிதுனிடம் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தினரிடம் மிதுன் கேட்டு உள்ளார். அதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர், நாங்கள் இப்படித்தான் பாடம் புகட்டுவோம்.

கல்லூரியில் படிப்பை தொடர வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் சகித்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் கல்லூரியை விட்டு வெளியேறலாம் என பதிலாக கூறியுள்ளனர்.

தெலுங்கானாவில் ஒரு வாரத்தில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் என 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவின் வாரங்கால் மாவட்டத்தில் காகத்தியா மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பிரீத்தி. இளநிலை மருத்துவரான அவர், தற்கொலை செய்து கொண்டார்.

பிரீத்தி ராகிங் கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில், எம்.ஜே.எம். மருத்துவமனையின் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோன்று, நிஜாமாபாத் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தாசரி ஹர்ஷா என்பவர், கடந்த சனி கிழமை தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கானாவில், மற்றொரு சம்பவத்தில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த மாணவி ஒருவர் தனது உறவினர் வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story