தமிழக அரசிடம் சொல்லுங்கள்... பூரண மதுவிலக்கு பற்றி பேசிய திருமாவளவனுக்கு நிர்மலா சீதாராமன் பதில்


தமிழக அரசிடம் சொல்லுங்கள்... பூரண மதுவிலக்கு பற்றி பேசிய திருமாவளவனுக்கு நிர்மலா சீதாராமன் பதில்
x

பூரண மதுவிலக்கு பற்றி தமிழக அரசிடம் சொல்லுங்கள் என திருமாவளவனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

புதுடெல்லி,

சிதம்பரம் தொகுதியின் எம்.பி.யும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாளவன் மக்களவையில் பேசினார். அப்போது அவர், ‛இந்திய அரசு போதைப்பொருளையும், சாராயத்தையும் முழுமையாக நீக்குவதற்கு, விலக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நான் இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகுவதை எண்ணி கவலைப்படுகிறேன். இந்த அரசுக்கு அதுதொடர்பான வேதனை இருக்கிறதா?

மனிதவளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. போதைப்பொருள் என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக தாராளமாக புழக்கத்தில் உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. 4 மாநிலங்களை தவிர எல்லா மாநிலங்களிலும் அரசு மதுபானம் விற்பனை செய்கிறது.

இது நாட்டுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம். இளைஞர்களுக்கு செய்கிற துரோகம். மனிதவளத்தை சிதைப்பதற்கான நடவடிக்கை. எனவே தேசிய மதுவிலக்கிற்கு அரசு ஒரு கொள்கையை கொண்டு வந்து இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்'' என்று பேசினார்.

இதையடுத்து திருமாவளவனுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர், "இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார். இந்த விஷயத்தில் அவர் தனது கவலையை பகிர்ந்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

அதே சமயம் தமிழகத்தில் அவரது கட்சி கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது. அங்கு 56 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி உள்ளனர். நீங்கள் முதலில் அறிவுரைகளை தமிழ்நாட்டுக்கு சொல்ல வேண்டும். அங்கு முதலில் பேச வேண்டும். போதைப்பொருள் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. இதனை தவிர என்னால் எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.

இதனிடையே தமிழ்நாடு கள்ளச்சாராய உயிரிழப்பு பற்றி நிர்மலா சீதாராமன் கூறியதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story