ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட இடத்தில் சரியாக எழுப்பப்பட்டுள்ளது - யோகி ஆதித்யநாத்


ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட இடத்தில் சரியாக எழுப்பப்பட்டுள்ளது - யோகி ஆதித்யநாத்
x

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராம ஜென்ம பூமியில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

அயோத்தி,

ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். அப்போது கருவறை அமைக்கப்படும் பகுதியில், 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து பணிகள் தொடங்கப்பட்டது.

சுமார் 2.77 ஏக்கர் நிலத்தில் 380 அடி நீளமும், 250 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான கோவிலாக கட்டப்பட்டுள்ளது. மூலவர் சன்னதி உள்ள 44 நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த கோவில் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது.

பல்லேறு சிறப்புகள் உள்ள பால ராமர் சிலை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருவறைக்குள் வைக்கப்பட்டது. அப்போது சிறப்பு பூஜைகள், வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. முன்னதாக கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ந் தேதி தொடங்கின. சரயு நதியில் இருந்து கலசங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டன.

அங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 121 அர்ச்சகர்கள் யாக சாலை பூஜைகளை செய்தனர். கணபதி பூஜை, பிரவேச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.

இந்தநிலையில் உலகமே எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பால ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்துக்கான முக்கிய பூஜைகள் நடந்தன. பகல் 12.29 மணிக்கு சிலையின் கண்களில் இருந்த மஞ்சள் நிற துணி அகற்றப்படு, கண் திறப்பு எனப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 121 அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதினர். பின்னர் கையில் தங்க வில் அம்புடன், சிறப்பு அலங்காரத்தில் பால ராமர் காட்சி அளித்தார். ஐதீக நிகழ்ச்சிகளுக்கு பின்னர் பால ராமருக்கு, பிரதமர் மோடி தீபாராதனை செய்தார்.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட இடத்தில் சரியாக எழுப்பப்பட்டுள்ளதாக உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

'பிரான் பிரதிஷ்டா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அவர், "பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட இடத்தில் சரியாக கோவில் வந்துள்ளது. இந்த வரலாற்று தருணம், தலைமுறைகளாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, இது போன்ற ஒரு தருணத்தில், உணர்ச்சிகளின் வரம்பை, வார்த்தைகளில் தெரிவிக்க முடியாது. என் மனமும் உணர்ச்சிகளின் சுழலில் சிக்கித் தவிக்கிறது, இங்கே உங்கள் அனைவரின் மத்தியிலும் நான் நிற்கும் போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு வியப்படைகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான உணர்ச்சிகளை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் சந்தேகமில்லாமல் சொல்ல முடியும்.

இந்த வரலாற்று மற்றும் ஆழமான புனிதமான சந்தர்ப்பத்தில், நாட்டின் ஒவ்வொரு நகரமும் கிராமமும் அயோத்தி தாமாக மாறியுள்ளது. இன்று ஒவ்வொரு பாதையும் ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தை நோக்கி ஒன்றிணைந்துள்ளது" என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.


Next Story