டெல்லி எல்லையில் பதற்றம்; போலீசார் தாக்குதலில் விவசாயி காயம்


டெல்லி எல்லையில் பதற்றம்; போலீசார் தாக்குதலில் விவசாயி காயம்
x
தினத்தந்தி 21 Feb 2024 5:57 PM IST (Updated: 21 Feb 2024 6:00 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் போராட்டத்தின்போது, டெல்லியை ஒட்டிய கனூரி எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாபஸ் பெறப்பட்டது. அதே சமயத்தில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து விவசாயிகள் மீண்டும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்காக பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லிக்கு படையெடுத்தனர்.

நடப்பு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில், விவசாய சங்கத்தினர் மத்திய மந்திரிகளுடன் 8, 12, 15 மற்றும் 18 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும், அது தோல்வியிலேயே முடிந்தது.

4-வது சுற்று பேச்சுவார்த்தை பற்றி பஞ்சாப் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் பாந்தர் கூறும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய அரசின் முன்மொழிதலை பற்றி அடுத்த 2 நாட்களில் நாங்கள் ஆலோசனை மேற்கொள்வோம். எங்களுடைய பிற கோரிக்கைகளை பற்றி அரசும் தீர ஆலோசனை மேற்கொள்ளும்.

இதில், முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்றால், எங்களுடைய டெல்லி செல்லும் பேரணியை 21-ந்தேதி நாங்கள் தொடருவோம் என்று கூறினார்.

4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, பருப்புகள், மக்காசோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு அமைப்புகள் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என மத்திய அரசு முன்மொழிந்தது. இதுபற்றி விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முன்வந்தது.

ஆனால், அரசின் இந்த முடிவை ஏற்காமல், விவசாயிகள் நிராகரித்து விட்டனர். இது விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என கூறினர். இதனால், இன்று டெல்லி நோக்கி பேரணியாக செல்வது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர்.

இந்த சூழலில், திட்டமிட்டபடி விவசாயிகளின் போராட்டம் இன்று தொடர்ந்தது. போராட்டத்தின்போது, டிராக்டர்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்தினர். இதனை கொண்டு தடுப்பான்களை உடைத்து முன்னேற திட்டமிட்டது தெரிய வந்தது. இதற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தின்போது, கல்லெறியும் சம்பவமும் நடந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியை ஒட்டிய கனூரி எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் முதலில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆனால், அதில் பலன் எதுவும் இல்லை. தொடர்ந்து விவசாயிகள் முன்னேறினர்.

இந்த சூழலில், வன்முறையில் ஈடுபட்ட சிலரை கலைந்து போக செய்வதற்காக போலீசார் தடியடி நடத்தினர். இதில், காயமடைந்த விவசாயி ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் விவசாயிகள் போராட்டத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு 5-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தரப்பில் முடிவாகி உள்ளது.


Next Story