இந்திரா காந்தியுடன் துணை நின்ற சிக்கமகளூரு மக்களுக்கு நன்றி பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கமான பேச்சு


இந்திரா காந்தியுடன் துணை நின்ற சிக்கமகளூரு மக்களுக்கு நன்றி  பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கமான பேச்சு
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:47 PM GMT)

எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறியபோது இந்தியா காந்தியின் பின்னால் நின்ற சிக்கமகளூரு மக்களுக்கு முழுமனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.

சிக்கமகளூரு-

எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறியபோது இந்தியா காந்தியின் பின்னால் நின்ற சிக்கமகளூரு மக்களுக்கு முழுமனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.

பிரியங்கா காந்தி

கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தை முற்றுகையிட தொடங்கி உள்ளனர். அதன்படி கர்நாடகத்தில் தற்போது அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் மற்றும் மைசூருவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரித்தார். மேலும் பிரமாண்ட ஊர்வலமும் நடத்தினார். இந்த நிலையில் நேற்று அவர் சிக்கமகளூருவுக்கு வந்தார். அவர் வரும்போது அங்கு பலத்த மழை பெய்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பிரியங்கா காந்தியின் வருகைக்காக அங்கு காத்திருந்தனர். பிரியங்கா காந்தியை பார்த்ததும் அவர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆரவாரம் செய்தனர். பின்னர் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டம் எனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த இடமாகும். ரம்பாபுரி மற்றும் சாரதாம்மன் கோவில்களுக்கு எனது தந்தை ராஜீவ்காந்தி வந்து சென்றுள்ளார். எனது சகோதரர் ராகுல்காந்தியும் இங்கு வந்து சென்றிருக்கிறார். எனது பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த இந்த மண்ணில் என்னுடைய அண்ணன் ராகுல்காந்திக்கும் நல்லது நடக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

இந்த வேண்டுதலை நான் கடவுளிடம் கேட்டிருக்கிறேன். கர்நாடகாவில் பா.ஜனதா அரசு இதுவரை பொதுமக்களுக்கு ஒரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை. அதுபோல் மத்திய அரசு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறி எந்தவொரு வேலைவாய்ப்பையும் வழங்கவில்லை. 1978-ம் ஆண்டு இந்த மண்ணில் எனது பாட்டி பிரசாரம் செய்தபோது மழை பெய்தது. எங்களது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த மண்ணை மறக்காமல் இன்றுவரை மதித்து வருகிறோம். அன்று இந்திரா காந்தி பேசிய அதே இடத்தில் மேடை அமைத்து, மழை பெய்யும் சூழ்நிலையில் உங்கள் முன் நின்று நான்(பிரியங்கா காந்தி) பேசுகிறேன். இது எனக்கு ஒரு உணர்வுப்பூர்வமான தருணம்.

நான் பேசும்போது மழை வருகிறது. இது கடவுளின் ஆசீர்வாதம். ஒரு காலத்தில் எனது பாட்டி இந்திரா காந்தியையும் மத்திய அரசு இதுபோல் நாடாளுமன்றத்தை விட்டு துரத்தியது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்தது. எனது அண்ணனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் ஒரே மாதிரியான பொய் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. தற்போது எங்கள் குடும்பம் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறுகிறது. எங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்கள்(மக்கள்) குடும்பமும் தான். இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டும் எனது அண்ணனும், நீங்களும்(மக்கள்) வெற்றி காண வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது. நாங்கள் கடவுள் ஆசியுடன் உண்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுகிறோம்.

உண்மைக்காக நடைபெறும் போர்

1978-ம் ஆண்டு எனது பாட்டி இந்திரா காந்தியும், எங்கள் குடும்பமும் பிரச்சினைகளில் சிக்கி தடுமாறியது. அப்போது அவருடன் சிக்கமகளூரு மக்கள் துணை நின்றனர். அவசர சட்ட காலத்துக்கு பிறகு நடந்த தேர்தலில எனது பாட்டி இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார். அதையடுத்து தான் அவர் சிக்கமகளூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 77 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். அதற்காக இந்த தருணத்தில் எங்கள் குடும்பத்தின் 3 தலைமுறையினர் சார்பில் முழுமனதுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பொய் வழக்கை முறியடித்து எனது பாட்டி இந்திரா காந்தி மீண்டும் நாடாளுமன்றத்துக்கு சென்றதுபோல் எனது அண்ணன் ராகுல் காந்திக்கும் நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். ராகுல் காந்தியும், எங்களது மொத்த குடும்பமும் இந்நாட்டு மக்கள் எங்கள் பின்னால் நிற்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். கர்நாடக தேர்தல் உண்மைக்காக நடைபெறும் போர் ஆகும்.

விலைவாசி உயர்வு

அடுத்த தேர்தலில் எனது அண்ணன் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். கர்நாடக மாநில மக்கள் உண்மையானவர்கள். புராதன காலத்தை மறக்காமல் இன்றும் பல இடங்களில் அதை அப்படியே மதித்து வருகின்றனர். அந்த கலாசாரத்தை நான் பல இடங்களில் பார்த்துள்ளேன். எனது தந்தை சிறுவயதில் ஐதராபாத், பெங்களூரு நகரங்கள் பெரிய நகரங்களாக உருவெடுக்கும் என்று கூறினாராம். தற்போது அது நடந்துள்ளது.

ஆனால் பா.ஜனதாவின் ஆட்சியில் பெங்களூரு நகரம் தனது அழகை இழந்து வருகிறது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் மக்களை வஞ்சித்து வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் விலையை பன்மடங்கு உயர்த்திவிட்டது. ஜி.எஸ்.டி.(சரக்கு மற்றும் சேவை வரி) வரியை விதித்து மக்களை வஞ்சித்து வருகிறது.

காங்கிரஸ் அமோக வெற்றி...

பாக்குத்தோட்ட தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது செய்வதாக கூறி மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. அவர்களுக்கு என எந்த ஒரு நலத்திட்டத்தையும் செய்து கொடுக்கவில்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாக்குத்தோட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். அவ்வாறு செய்து அவர்களுக்கு நல்லது செய்வோம். மத்திய, மாநில அரசுகள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி இருந்தால் பல கிலோ மீட்டர்களுக்கு மெட்ரோ ரெயில் பாதை போட்டிருக்கலாம்.

அவர்கள் கொள்ளையடித்த பணத்தை உங்களுக்கு(மக்கள்) திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு மீண்டும் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும்.


Next Story