தாவணகெரே மேயர் தேர்தல்பா.ஜனதா கட்சியை சேர்ந்த விநாயக் பயில்வான் தேர்வு
தாவணகெரே மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட விநாயக் பயில்வான் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு-
மேயர் தேர்தல்
தாவணகெரே மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஏனென்றால் தொடர்ந்து பல ஆண்டாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்தான் மேயராக இருந்து வருகின்றனர். எனவே இந்த முறை காங்கிரசை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு மேயர் பதவி கிடைக்கவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டனர்.
அதன்படி இந்த முறை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மேயர் பதவி ஒதுக்கப்பட்டது. காங்கிரசில் அந்த சமுதாயத்தை சேர்ந்த உறுப்பினர் உள்ளனர். ஆனால் பா.ஜனதாவில் இல்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தங்களது வேட்பாளராக விநாயக் பயில்வான் என்பவரை நிறுத்த திட்டமிட்டது.
இதை அறிந்த பா.ஜனதா கட்சியினர் விநாயக் பயில்வானை தங்கள் பக்கம் இழுத்தனர். இவர் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் யாரையும் நிறுத்தவில்லை என்று
கூறப்படுகிறது.
பா.ஜனதா வெற்றி
இதையடுத்து தேர்தல் நடத்திய அதிகாரிகள், பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட விநாயக் பயில்வான் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே நேரம் துணை மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் கவிதா என்பவர் போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் யசோதா என்பவர் போட்டியிட்டார். இவர் கவிதாவை விட 5 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இருப்பினும் மேயர் பதவி பா.ஜனதாவிற்கு சென்றதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்தனர். அதே நேரம் பா.ஜனதா கட்சியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்த முறையும் பா.ஜனதா கட்சிக்கு மேயர் பதவி கிடைத்திருப்பதால் அவர்கள் இனிப்பு வழங்கி உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.