ராய்ப்பூரில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு; கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு


ராய்ப்பூரில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு; கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
x

சத்தீஷ்கார் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வரும் பிப்ரவரி மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கிறது.

புதுடெல்லி,

சத்தீஷ்கார் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வரும் பிப்ரவரி மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. இதற்கான முடிவு, கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடந்த வழிகாட்டும் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவராக கார்கே...

நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் 51 ஆண்டுகளுக்கு பிறகு, மறைந்த தலைவர் ஜெகஜீவன்ராமுக்கு பின்னர், முதல் முறையாக தலித் வகுப்பைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி தலைவர் பொறுப்பு ஏற்றார்.

அதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறவரையில் கட்சி காரியங்களைக் கவனிப்பதற்காக 47 பேரைக் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைத்தார். இந்தக் குழுவில் சோனியா காந்தி, மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ஏ.கே. அந்தோணி, பிரியங்கா காந்தி, அபிஷேக் சிங்வி, அஜய் மக்கான், அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், டாக்டர் ஏ.செல்லக்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

வழிகாட்டும் குழு கூட்டம்

இந்த வழிகாட்டும் குழுவின் முதல் கூட்டம், கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீரா குமார், அம்பிகா சோனி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நடத்தி வருவதால், இந்தக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.

ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு

இந்த கூட்டத்தில் வரும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாதி பகுதியில் கட்சியின் 85-வது மாநாட்டை சத்தீஷ்கார் மாநிலம், ராய்ப்பூரில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாநாடு 3 நாட்கள் நடைபெறும்.

இதில் முக்கிய நிகழ்வாக கட்சித்தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கட்சி முறைப்படி ஒப்புதல் அளிக்கும்.

2 மாத கால பிரசார இயக்கம்

வழிகாட்டும் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-

ராய்ப்பூரில் பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் 3 நாட்கள் நடைபெறுகிற காங்கிரஸ் மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

வழிகாட்டும் குழுவில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றியும் ஆராயப்பட்டது.

ஜனவரி 26-ந் தேதி தொடங்கி 2 மாத காலத்துக்கு பிரமாண்டமான அளவில் 'கைக்கு கை பிரசாரம்' என்ற தலைப்பில் பிரசார இயக்கம் நடத்தப்படும். இதன்படி, அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய தொகுதி அளவிலான பாதயாத்திரை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பைக்கவனிக்கும் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை ஜனவரி 26-ந் தேதி முடிக்க கட்சி இலக்கு வைத்துள்ளது. இந்த யாத்திரை, டிசம்பர் 24-ந் தேதி டெல்லியில் நுழையும்" என தெரிவித்தார்.


Next Story