தினமும் சாவதற்கு பதில் ஒரு முறை செத்து விடலாம்; குடும்ப வன்முறையால் 3 சகோதரிகள் தற்கொலை


தினமும் சாவதற்கு பதில் ஒரு முறை செத்து விடலாம்; குடும்ப வன்முறையால் 3 சகோதரிகள் தற்கொலை
x

தினமும் சாவதற்கு பதில் ஒரு முறை செத்து விடலாம் என சம்பவத்திற்கு முந்தின நாள் வாட்ஸ்அப்பில் மம்தா தெரிவித்து உள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் தினசரி குடித்து விட்டு வந்து அடித்து உதைக்கும் கணவர், குடும்ப வன்முறை ஆகியவற்றால் 2 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 3 சகோதரிகள் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் துது நகரில் கிணறு ஒன்றில் 5 உடல்கள் மிதந்துள்ளன. இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் போலீசாருக்கு உடனடியாக நேற்று தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றினர். அவர்களில் உயிரிழந்திருந்த பெண்கள் காலு தேவி, மம்தா மற்றும் கம்லேஷ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 4 வயது குழந்தை மற்றும் பிறந்து 27 நாட்களேயான குழந்தை ஆகிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன. இவர்கள் இருவரும் காலு தேவியின் குழந்தைகள்.

இவர்களில் மம்தா தேவி மற்றும் கம்லேஷ் ஆகிய இருவரும் நிறைமாத கர்ப்பிணிகள் ஆவர் என்ற கொடுமையும் தெரிய வந்துள்ளது.

அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்ட கிணறு, அவர்களுடைய வீடுகளில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளன. கடந்த புதன்கிழமையே அவர்கள் 5 பேரும் காணவில்லை என கூறப்படுகிறது. ஆனால், நேற்று வரை போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபடவில்லை.

காலு தேவியை அவர்களது உறவினர்கள் அடித்து, தாக்கியதில் அவர் 15 நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு உள்ளது. சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து சமீபத்திலேயே அவர் வீட்டுக்கு வந்துள்ளார் என உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார். கர்ப்பிணியான 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் 3 பெண்களும் தற்கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.




சகோதரிகளான இந்த 3 பேரும் நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும் என விரும்பியுள்ளனர். ஆனால், தினமும் குடித்து விட்டு, அடித்து, உதைக்கும் நபர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு விட்டனர் என கூறப்படுகிறது. அவர்களின் கணவர்கள் 5 மற்றும் 6ம் வகுப்பு வரையே படித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தின நாள் மம்தா வாட்ஸ்அப் பதிவில், ஒவ்வொரு நாளும் சாவதற்கு பதில் ஒரு முறை செத்து விடலாம் என தெரிவித்து உள்ளார்.

மூன்று பேரில் இளைய சகோதரி சமீபத்தில் மொபைல் போனில் யாருடனோ பேசியதற்காக அடித்து தாக்கப்பட்டு உள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.

3 பேரும் 2003ம் ஆண்டில் அவர்களது சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால், 3 பேரும் நன்றாக படித்து தங்களது உழைப்பில் முன்னுக்கு வரவேண்டும் என விரும்பியுள்ளனர்.

மம்தா போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். காலு பி.ஏ. பட்டப்படிப்பில் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். இவர்களின் இளைய சகோதரியான கம்லேஷ் பல்கலை கழகத்தில் படிக்க சேர்ந்துள்ளார்.

இவர்கள் வேலைக்கோ அல்லது படிக்கவோ போக அவர்களது கணவர்களுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. 3 சகோதரர்களான நர்சி, கொரியோ மற்றும் முகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமை கோணத்திலும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.


Next Story