கரடி தாக்கி விவசாயி படுகாயம்; ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சிகாரிப்புரா அருகே மாட்டிற்கு தீவனத்திற்காக புல் அறுக்க வனப்பகுதிக்கு சென்றபோது கரடி தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
சிவமொக்கா;
கரடி தாக்கியது
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிடகனாள் மராட்டி கேம்ப் பகுதியை சேர்ந்தவர் ஜெயண்ணி கவுளி (வயது 26). விவசாயியான இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் மாடுகளுக்கு தீவனத்திற்காக அந்த பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோட்டத்தில் புல் அறுக்க சென்று இருந்தார். அங்கு அவர் புல் அறுத்து கொண்டிருந்தபோது அருகில் இருந்த புதரில் கரடி ஒன்று பதுங்கி இருந்துள்ளது.
இதையடுத்து அந்த கரடி ஜெயண்ணி மீது திடீரென பாய்ந்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜெயண்ணி மயங்கி விழுந்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இந்த நிலையில் மாலை வரை ஜெயண்ணி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், அவரை தோட்டத்திற்கு சென்று பார்த்து உள்ளனர். அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். இதையடுத்து அவரை அங்கிருந்து மீட்டு சிகாரிப்புரா அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறை அதிகாரி ராகவேந்திரா தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.