கொரோனாவுக்கு எதிரான 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி இடைவெளி 6 மாதங்களாக குறைப்பு - மத்திய அரசு தகவல்


கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இடைவெளி 6 மாதங்களாக குறைப்பு - மத்திய அரசு தகவல்
x

கொரோனாவுக்கு எதிரான ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி இடைவெளியை 6 மாதங்களாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவு அடைந்தவர்களுக்கு தற்போது 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்பட்டு வருகிறது.

தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருகிற நிலையில், இந்த இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைப்பதற்கு தடுப்பூசி தொடர்பான அரசின் ஆலோசனை குழுவான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் இனி முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வழி பிறந்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

18 முதல் 59 வயது வரையிலான அனைத்து பயனாளிகளுக்கும் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி தனியார் மையங்களில் 6 மாதங்களில் (26 வாரங்களில்) செலுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார பராமரிப்பு பணியாளர்கள், முன் கள பணியாளர்கள் ஆகியோருக்கு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் முடிவில் அரசு தடுப்பூசி மையங்களில் முன் எச்சரிக்கை டோஸ் இலவசமாக செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story