'பிராண்ட் பெங்களூரு' திட்டம் அமல்படுத்தப்படும்


பிராண்ட் பெங்களூரு திட்டம் அமல்படுத்தப்படும்
x

‘பிராண்ட் பெங்களூரு’ திட்டம் மூலம் பெங்களூரு மாநகர் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

பட்ஜெட் தாக்கல்

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பெங்களூருவில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏழை மக்கள் வசதிக்காக இந்திரா உணவகங்களை கொண்டு வந்தோம். ஆனால் கடந்த ஆட்சியில் அவற்றை பா.ஜனதா அரசு முறையாக நிர்வகிக்கவில்லை. கடந்த பா.ஜனதா ஆட்சியின்போது பெங்களூருவில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் மற்றும் தற்போது கிடப்பில் உள்ள வளர்ச்சி பணிகள் என ஒட்டுமொத்தமாக ரூ.45 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இந்த கடனில் இருந்து விடுபடுவதற்கு 6 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புறநகர் ரெயில் திட்டம்

மேலும் இந்த கடன், பெங்களூருவில் வளர்ச்சியை பாதிக்காமல் இருக்க கடுமையான முயற்சிகள் எடுக்கப்படும். நெடுஞ்சாலைகள், சிமெண்டு சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, ராஜ கால்வாய்கள் ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை பள்ளங்கள் மூடல் போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில் திட்டப்பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது.

"பிராண்ட் பெங்களூரு" திட்டத்தின் மூலம் பெங்களூருவை சர்வதேச தரத்திற்கு எடுத்து செல்வோம். 2026 மார்ச் மாதத்திற்குள், பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் 20 வடிகால் வழித்தடங்கள் சீரமைக்கப்படும். இதற்காக ரூ.1,411 கோடி செலவிடப்பட உள்ளது. இந்த தொகை குடிநீர் வாரிய நிதியில் இருந்து பயன்படுத்தப்படும். இதன் மூலம் பெங்களூருவில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி போன்ற இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.

256 ஏக்கர் நிலம்

ரூ.800 கோடி செலவில் பெங்களூருவில் உள்ள பிரதான சாலைகளில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமெண்டு சாலையாக மாற்றப்படும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் முக்கிய சாலைகளில் சுமார் ரூ.273 கோடி செலவில், 83 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும். ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகள் வருவாய் துறை மூலம் விரைவில் இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில், பெங்களூருவில் புதிதாக 256 ஏக்கர் நிலம் பூங்காவாக மாற்றப்படும். மேலும் அறிவியல் முறையில் நகரில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக பெங்களூருவுக்கு ரூ.1,250 கோடியும், பெங்களூரு புறநகர் பகுதிகளுக்கு ரூ.2,150 கோடியும் விடுவிக்கப்படும் என்றார்.


Next Story