தாலிகட்டும் நேரத்தில் நாடகமாடி திருமணத்தை நிறுத்திய மணமகள்
மைசூருவில் தாலி கட்டும் நேரத்தில் நாடகமாடி மணமகள் திருமணத்தை நிறுத்தினார். அவர் காதலனின் நினைவால் திடீரென்று மனம் மாறினார்.
மைசூரு:
மயங்கி விழுந்த மணமகள்
மைசூரு நகரம் சுண்ணதகேரி பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். நேற்று இவருக்கும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் செய்திருந்தனர். மைசூரு நகரில் உள்ள மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இரு வீட்டின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
முகூர்த்த நேரம் வந்தபோது புரோகிதர், மணமகனை, மகளின் கழுத்தில் தாலி கட்டும்படி கூறினார். இதையடுத்து மணமகன் தாலி கட்ட தயாரான போது, திடீரென்று மணமகளான இளம்பெண் மயங்கி விழுந்தார். இதைபார்த்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கீழே விழுந்த மணமகளின் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இதையடுத்து மணமகள் சகஜ நிலைக்கு வந்தார்.
விருப்பம் இல்லை
இதையடுத்து மணமகன், இளம்பெண் கழுத்தில் தாலிக்கட்ட மீண்டும் தயாரானார். அப்போது தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என மணமகளான இளம்பெண் குண்டை தூக்கி போட்டார். மேலும் இந்த திருமணத்தில் இருந்து தப்பிக்கவே மயங்கி விழுவது போல நடித்ததாகவும் தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதைகேட்டு இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். இளம்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் மணமகன் குடும்பத்தினர், மணமகள் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திருமணத்துக்கான செலவு ரூ.5 லட்சத்தை உடனடியாக தர வேண்டும் என்று மணமகன் குடும்பத்தினர் விடாப்பிடியாக பேசினர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காதலன் நியாபகம் வந்ததால்...
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.ஆர். போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, மணமகளான இளம்பெண் சுண்ணதகேரியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலை கைவிட்டு திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், மணமேடையில் அமர்ந்திருந்தபோது காதலன் நியாபகம் வந்ததால் மனம் மாறி, நாடகமாடி இந்த திருமணத்தை நிறுத்தியதாகவும் இளம்பெண் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இருவீட்டாரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மைசூருவில் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.