ரூ.2,000 கோடியில் கால்வாய்கள் மேம்படுத்தப்படும்


ரூ.2,000 கோடியில் கால்வாய்கள் மேம்படுத்தப்படும்
x

பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்ட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ரூ.2,000 கோடியில் கால்வாய்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

பசவராஜ் பொம்மை நகர்வலம்

பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி இரவு 2 மணி நேரத்தில் 114 மில்லி மீட்டர் கொட்டித்தீர்த்தது. இதனால் புறநகர் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கோரமங்களா, உரமாவு, எலகங்கா, ஹெப்பால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ராஜராஜேஸ்வரிநகரில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார். ஜே.சி.நகர், கமலாநகர் மெயின்ரோடு, லக்கரே, நாகவரா, எச்.பி.ஆர்.லே-அவுட், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய், மெட்ரோ ரெயில் நடைபெறும் பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மழை பெய்யவில்லை

முதலில் ஜே.சி.நகரில் மழை பாதிப்புகளை பார்வையிட்டேன். அதன் பிறகு நாகவரா மெட்ரோ ரெயில் நிலைய பணிகளை ஆய்வு செய்தேன். எச்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள 5-வது பிளாக்கில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்த்தேன். மிக குறைந்த நேரத்தில் அதிகனமழை பெய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இவ்வளவு குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்யவில்லை.

மே மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 4 மணி நேரங்களில் பெய்துள்ளது. மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நகரம் வளர்ந்து வருவதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு தீர்வு காண முடியவில்லை. விருஷபாவதி, சல்லகட்டா கால்வாய்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதனால் அனைத்து கால்வாய்களையும் மேம்படுத்த ரூ.1,600 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு

ரூ.400 கோடி செலவில் பழைய கால்வாய்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் ரூ.2,000 கோடியில் கால்வாய்கள் மேம்படுத்தப்படுகிறது. முக்கியமாக கால்வாய்களில் தூர்வார வேண்டியுள்ளது. எச்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள கால்வாயில் தூர்வாரும்படி உத்தரவிட்டுள்ளேன். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். பல பகுதிகளில் கால்வாய்களில் இவ்வாறு தூர்வாரப்படும். கழிவுநீரை சுத்திகரிக்கும் மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹெப்பாலில் ஏற்கனவே 10 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் மையம் உள்ளது. அங்கு மேலும் 6 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் மையம் ஒன்றை கூடுதலாக அமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விருஷபாவதி கால்வாயில் பழைய பாலங்கள் உள்ளன. இது நீரை தடுப்பதாக உள்ளது. அதனால் அந்த பாலங்களை நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் இடைவிடாமல் 48 மணி நேரம் மேற்கொண்டனர்.

ரூ.25 ஆயிரம் நிவாரணம்

ஒசகெரேஹள்ளியில் கால்வாய் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வெள்ளம் புகுந்து ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த பணி உடனடியாக தொடங்கப்படுகிறது. நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மழை பாதிப்பு குறித்து முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள் ஏற்கப்படும்.

பெங்களூரு அதிகவேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் புதிய புதிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெங்களூரு மாநகராட்சி எல்லை அதிகமாக உள்ளது. நிர்வாக ரீதியாக இதை பிரிக்கும் எண்ணமும் உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த நகர்வலத்தின்போது பசவராஜ் பொம்மை பி.எம்.டி.சி. சொகுசு பஸ்சில் பயணம் செய்தார். அவருடன் மந்திரி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பயணித்தனர்.


Next Story