போலீசாரால் புனையப்பட்ட கொலை வழக்கு... 24 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவித்த சுப்ரீம் கோர்ட்டு


போலீசாரால் புனையப்பட்ட கொலை வழக்கு... 24 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவித்த சுப்ரீம் கோர்ட்டு
x

போலீசாரால் புனையப்பட்ட கொலை வழக்கு என கூறி ஆயுள் தண்டனை கைதிகளை 24 ஆண்டுகளுக்கு பின் சுப்ரீம் கோர்ட்டு விடுவித்து உள்ளது.

புதுடெல்லி,

அசாமில் பிரதீப் புகான் என்பவர் கடந்த 1989-ம் ஆண்டு ஜூனில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தது. அவர்கள் குற்றவாளிகள் என விசாரணை கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதன்பின், 2015-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனு மீது நடந்த விசாரணையில் ஐகோர்ட்டும் அந்த தீர்ப்பை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டதில், குற்றவாளிகளுக்கு எதிரான சான்றுகள் நம்பக தன்மையற்றவை. உயிரிழந்த நபரை கைது செய்ய போகும்போது, தற்செயலாக போலீசாரே அவரை கொன்றிருக்க கூடும்.

போலீசாரால் இந்த வழக்கு புனையப்பட்டு உள்ளது. இந்த மொத்த வழக்கும் போலீசாரால் பொய்யாக உருவாக்கப்பட்டு உள்ளது என நீதிபதிகள் அமர்வு தெரிவித்து உள்ளது. போலீசார், இரு தரப்பினருக்கு இடையே உள்ள பகைமையை அறிந்து கொண்டு, பொய்யான ஒரு வழக்கை குற்றவாளிகளுக்கு எதிராக செட்-அப் செய்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து கோர்ட்டு அளித்த தனது தீர்ப்பில், இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். சமர்ப்பிக்கப்படவில்லை. கையெழுத்துகளும் நிரூபிக்கப்படவில்லை. பல சாட்சிகளின் சாட்சியமும் வேறுபட்டு உள்ளன என தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.

அதனால், சந்தேகத்தின் பலனை குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பெற தகுதியுடையவர்கள் ஆகின்றனர். அதனால், அவர்களது மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. குற்றவாளி என்ற தீர்ப்பும், தண்டனையும் ஒத்தி வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்று அந்த அமர்வு தெரிவித்தது.

விசாரணை கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மொத்தம் 11 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது. எனினும், அவர்களில் 4 பேரே சுப்ரீம் கோர்ட்டை அணுகி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர்.

எனினும், இந்த வழக்கில் போலீசார் குற்றவாளி எனும்போது, அவர்களுக்கான விசாரணை, தண்டனை உள்ளிட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.


Next Story