அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கேரளாவின் சின்னக்கானல் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானை தமிழகத்தின் கம்பம் பகுதிக்குள் புகுந்து தனது வேலையை காட்டியது.

இதனையடுத்து தமிழக வனத்துறை மிகுந்த சிரமத்துக்கு இடையே அரிக்கொம்பன் யானையை பிடித்து நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விட்டுள்ளது.

கேரளாவில் விடக்கோரி மனு

இதற்கிடையே அரிக்கொம்பன் யானையை கேரளாவில் மீண்டும் விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவை சேர்ந்த சி.ஆர்.நீலகண்டன், வி.கே. ஆனந்தன் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், 'ஆனைமலை தொடங்கி சின்னக்கானல் வழியாக பெரியாறு வரையிலான தடத்தை யானைகள் வழித்தடமாக அறிவிக்கவும், சின்னக்கானல் பகுதியை தேசிய பூங்கா அல்லது யானைகள் சரணாலயமாக அறிவிக்கவும், யானைகள் பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுபோல அரிக்கொம்பன் யானையை சின்னக்கானல் பகுதிக்கே மீண்டும் கொண்டுவர தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,

அரிக்கொம்பன் யானையை 2 ஆண்டுகள் ஜி.பி.எஸ். கருவியைக் கொண்டு கண்காணித்து, அரிக்கொம்பன் யானையின் முகத்திலுள்ள வளர்சிதை மாற்றத்தை ஆராய்ந்து உரிய மருத்துவ உதவியை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

தள்ளுபடி

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், 'இதுபோன்ற பல மனுக்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் இடையீட்டு மனு தாக்கல் செய்யுங்கள். இந்த விவகாரத்தை ஐகோர்ட்டும் விசாரித்து வருகிறது' என தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், 'யானையை தவறாக இடமாற்றம் செய்ததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.80 லட்சம் செலவாகி உள்ளது' என குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது, உரிய துறைகளிடமோ, உரிய நீதிசார் அமைப்பை மனுதாரர் அணுக அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story