மத்திய அரசின் நடவடிக்கை ஆப்பிள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்; பிரியங்கா காந்தி கண்டனம்


மத்திய அரசின் நடவடிக்கை ஆப்பிள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்; பிரியங்கா காந்தி கண்டனம்
x

இறக்குமதி வரியை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை இமாசல பிரதேச ஆப்பிள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் பயணமாக இமாசல பிரதேசம் சென்றார். பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் குலு, மண்டி, சிம்லா மற்றும் சோலன் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வு செய்தார். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆகஸ்ட் 14-ந் தேதி இங்கு சம்மர் ஹில்லில் உள்ள சிவன் கோவிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த பகுதியை பிரியங்கா காந்தி நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்கா காந்தி கூறும்போது, இமாசல பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இமாசலப்பிரதேச நெருக்கடியை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் மாண்டியை சேர்ந்த எம்.பி., பிரதீபா சிங் எழுப்புவார் என கூறினார்.

மேலும் அமெரிக்க ஆப்பிள்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்த பிரியங்கா காந்தி மாநிலத்தில் ஏற்படும் சேதத்தின் அளவு குறித்து மத்திய அரசு முழுமையாக அறியவில்லை.

ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும்போது கொள்முதல் விலையும் குறையும். இதனால் இமாசல பிரதேசத்தில் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.


Next Story