அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் வழங்கவில்லை; காங்கிரஸ் அரசு கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டது - பசவராஜ் பொம்மை விமர்சனம்
அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் வழங்குவதாக கூறி காங்கிரஸ் கட்சி கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டதாக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
அரசின் இலவச திட்டங்களை நிறைவற்றுவதாக அறிவித்துள்ளது குறித்து முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இலவச மின்சாரம்
சட்டசபை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. இதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. இப்போது 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் கூறியதற்கும், தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
அனைவருக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக கூறினர். உத்தரவாத அட்டையிலும் இதை குறிப்பிட்டுள்ளனர். ஒரு வீட்டில் மாதம் 70 அல்லது 80 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படலாம். ஆனால் அவர்கள் 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினாலும் அதை இலவசமாக வழங்க வேண்டும். ஆனால் சித்தராமையா கூறியுள்ள இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பில் வேறுபாடு உள்ளது.
மக்களை ஏமாற்றிவிட்டது
12 மாதங்களில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தை கூட்டி சராசரியாக பயன்படுத்தும் மின்சாரத்தில் 10 சதவீதத்தை மட்டும் கூடுதலாக பயன்படுத்த அனுமதி அளிப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் அரசு மக்களை ஏமாற்றிவிட்டது. அன்ன பாக்கிய திட்டத்தில் 5 கிலோ அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. அத்துடன் மேலும் 5 கிலோ அரிசி வழங்குவதாக முதல்-மந்திரி கூறியுள்ளார்.
அப்படி என்றால் நாங்கள் கொடுத்து வந்த ஒரு கிலோ ராகி, ஒரு கிலோ சோளம் ஆகியவற்றை நிறுத்த போகிறார்களா?. கிரக லட்சுமி திட்டத்தில் கர்நாடக மக்கள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியுமா?.
இலவச பயணம்
விண்ணப்பிக்க ஒரு மாதம், அதை பரிசீலிக்க ஒரு மாதம் என காலவிரயம் செய்கிறார்கள். அரசு பஸ்களில் சொகுசு பஸ்களில் இலவச பயணத்திற்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இப்போது சிவப்பு பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும். யுவநிதி திட்டம் கடந்த 2022-23-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் அரசு கூறியுள்ளது. அதனால் இந்த திட்டத்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு பயன் இல்லை.
அரசு பள்ளி கட்டிடம் கட்டுவது, ஆஸ்பத்திரி அமைக்கும் திட்டங்களை நிறுத்த போகிறீர்களா?, தலித், பழங்குடியின மக்களுக்கான நிதி குறைக்கப்படுமா?. மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொகையை ஒதுக்குவது நிறுத்த போகிறீர்களா?. கர்நாடக மக்களுக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
நிதி நெருக்கடி
கூடுதல் நிதி ஆதாரங்களை உருவாக்காவிட்டால், மாநில அரசின் நிதிநிலை சிக்கலில் சிக்கி கொள்ளும். கா்நாடகத்தை நிதி நெருக்கடியில் தள்ளக்கூடாது. எதிர்க்கட்சி தலைவரை பா.ஜனதா மேலிடம் வருகிற சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்குள் முடிவு செய்யும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.