நெருக்கடியான சூழலில் இலங்கை மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது; சோனியா காந்தி


நெருக்கடியான சூழலில் இலங்கை மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது; சோனியா காந்தி
x

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது என சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,



இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். தற்போது வரை போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே உள்ளனர்.

கோத்தபயா தப்பியோடிய நிலையில் அவரது வீட்டை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்தினர். இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து வைரலானது. இதேபோன்று, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும், மதிய உணவு உண்டும் வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டு உள்ள செய்தியில், இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை வருத்தத்துடன் காங்கிரஸ் கட்சி கவனித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது.

பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்களிடையே பெரிய அளவில் பாதிப்பும், மனஅழுத்தமும் ஏற்பட்டு உள்ளது.

இலங்கை மக்கள் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு சூழ்நிலையில் கஷ்டங்களை எதிர்கொண்டு வரும் இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று சர்வதேச சமூகமும் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.


Next Story