தொடர் கனமழையால் அணை நிரம்பியது; வாணிவிலாஸ் நீர்தேக்க பகுதியில் உள்ள கிராமம் தண்ணீரில் மூழ்கியது
தொடர் கனமழையால் அணை நிரம்பியதால் வாணிவிலாஸ் நீர்தேக்க பகுதியில் உள்ள கிராமம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிக்கமகளூரு;
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டது. அதன்பிறகு ஓய்வெடுத்திருந்த கனமழை தற்போது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வருகிறது.
இதன்காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சித்ரதுர்காவிலும் கடந்த சில தினங்களாக இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது.
கிராமம் தண்ணீரில் மூழ்கியது
இந்த தொடர் கனமழை காரணமாக ஒசதுர்கா தாலுகாவில் உள்ள வாணிவிலாஸ் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி உள்ளது. இந்த அணை 88 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்துள்ளது. இதன்காரணமாக அணையின் நீர்தேக்க பகுதியில் உள்ள பூஜாரஹட்டி என்ற கிராமம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் உடைமைகளை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாலுகா நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒசதுர்கா தாசில்தார் மல்லிகார்ஜூன், பூஜாரஹட்டி கிராமத்துக்கு நேரில் ெசன்று பார்வையிட்டார்.பின்னர் கிராம மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்ட அவர், தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.
22 குடும்பங்கள் சிக்கி தவிப்பு
இந்த நிலையில் பூஜாரஹட்டி கிராமத்தைெயாட்டி உள்ள குருமரடி கிராமத்தை சேர்ந்த 22 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்தமான ஆயிரம் ஆடுகளுடன் அங்குள்ள மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றனர். தற்போது பூஜாரஹட்டி கிராமம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் அவர்களால் மலையில் இருந்து கீழே இறங்கி வர முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்கள், மலையில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.
அவர்களுக்கு உறவினர்கள் பரிசல் மூலம் உணவு பொருட்களை கொண்டு சென்று வருகிறார்கள். இதுகுறித்து தாசில்தார் மல்லிகார்ஜூன் கூறுகையில், குருமரடி கிராமத்தை சேர்ந்த 22 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வாணி விலாஸ் அணையை ஒட்டி உள்ள மலையில் சிக்கி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் உணவு பொருட்களை பரிசல் மூலம் கொண்டு சென்று வருகிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.