கட்சி விவகாரங்களில் தேவேகவுடா குடும்பத்தில் எடுக்கும் முடிவே இறுதியானது
கட்சி விவகாரங்களில் தேவேகவுடா குடும்பத்தில் எடுக்கும் முடிவே இறுதியானது என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:-
பிற கட்சியினர் காங்கிரசில் சேரும் நிகழ்ச்சிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நீடிக்க முடியாது
ஜனதா தளம் (எஸ்) கட்சியில் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடந்து கொள்ள வேண்டும். கட்சி விவகாரங்களில் அவர்களின் வீட்டில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. அந்த கட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை. இதை யாராவது மீறினாலோ அல்லது தங்களின் சொந்த கருத்தை கூறினாலோ கட்சியில் நீடிக்க முடியாது.
அந்த கட்சியில் எனக்கு என்ன நடந்ததோ அதை நிலை தான் எஸ்.ஆர்.சீனிவாசுக்கு ஏற்பட்டுள்ளது. பிற கட்சியில் பலர் காங்கிரசில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் பா.ஜனதா கட்சியின் ஊழலின் பிடியில் இருந்து கர்நாடகத்தை காங்கிரசால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜனதா தளம் (எஸ்) கட்சியால் சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அவர்கள் தொங்கு சட்டசபை வர வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தான் ஆட்சிக்கு வரும்.
கர்நாடகம் நாசமாகிவிடும்
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகம் நாசமாகிவிடும் என்று மக்களுக்கு புரிந்துள்ளது. சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளன. ஊழலை ஒழிக்கவும், மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகத்தை நடத்தவும், சொன்னபடி நடந்து கொள்ளவும் காங்கிரசால் மட்டுமே சாத்தியம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் மாநிலத்தில் 100 சதவீதம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.