உத்தவ் தாக்கரே அணிக்கு புதிய சின்னம்: ஏக்நாத் ஷிண்டே கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்


உத்தவ் தாக்கரே அணிக்கு புதிய சின்னம்:  ஏக்நாத் ஷிண்டே கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
x

உத்தவ் தாக்கரே அணிக்கு தீபச் சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். இதனால் சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும்,ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டுள்ளது.

இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி கட்சி சின்னம் மற்றும் பெயருக்கு உரிமைகோரி கடந்த 4-ந்தேதி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தது. இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருஜுதா லட்கே போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பா.ஜனதா கட்சி முன்னாள் கவுன்சிலர் முர்ஜி பட்டேலை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் சிவசேனா கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணியிடம் விளக்கம்கேட்டு இருந்தது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையத்தில் முன்வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு தேர்தல் ஆணையம் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகிய 2 அணிகளும் பயன்படுத்த முடியாத வகையில் சிவசேனா கட்சியின் வில், அம்பு சின்னத்தை அதிரடியாக முடக்கியது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரே அணியினர் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தனர். இதேபோல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்து உள்ளனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயரையும் தீபச் சுடர் சின்னததையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

மேலும், மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தங்கள் அணிக்கு ஒதுக்க கோரிக்கை வைத்த 3 சின்னங்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. நாளை புதிய சின்னங்களை விண்ணப்பிக்குமாறு ஏக்நாத் ஷிண்டே அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story