அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
x
தினத்தந்தி 31 Jan 2024 10:30 AM GMT (Updated: 31 Jan 2024 12:14 PM GMT)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மேலும் இந்த சம்மன் சட்டவிரோதமானது அமலாக்கத்துறை சம்மனை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போதும் ஆஜராகாத நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில மந்திரி பரபரப்பான தகவலை வெளியிட்டார். ஆனால் சோதனையும் நடத்தப்படவில்லை, கைதும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், தற்போது 5-வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வருகிற 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story