கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு


கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அதையடுத்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

பெங்களூரு:

மனுக்கள் மீது பரிசீலனை

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 44 மனுக்கள் (4 தொகுதிகளை தவிர) ஏற்கப்பட்டுள்ளன.

மனுக்கள் வாபஸ் பெற இன்று(திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டுமே மனுக்களை வாபஸ் பெற காலஅவகாசம் உள்ளது. போட்டியில் இருந்து விலக விரும்புகிறவர்கள் இன்று மதியம் 3 மணிக்குள் தங்களின் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் டிக்கெட் கிடைக்காத பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

வாபஸ் பெறுவார்கள்

இதனால் அந்த கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டி வேட்பாளர்களின் மனுவை வாபஸ் பெற வைக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதனால் இன்று அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலையில் வெளியிடப்படுகிறது. இதில் எந்தெந்த தலைவர்களிடையே போட்டி ஏற்படும், தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றே சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன.

சூடுபிடிக்க தொடங்கும்

இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும். பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகத்திற்கு வரவுள்ளனர்.

இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி கர்நாடகத்தில் உள்ளார். அவர் இன்று தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே உள்துறை மந்திரி அமித்ஷா இன்று முதல் 3 நாட்கள் கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

வாக்காளர்களுக்கு பணம்

இந்த நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்க தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தற்போது பெரும்பாலானவர்கள் அதிநவீன செல்போன் பயன்படுத்துவதால், அவர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள். அதனால் வாக்காளர்களுக்கு பணமாக கொடுக்காமல், டிஜிட்டல் முறையில் யு.பி.ஐ. மூலமாக பே-டி-எம்., போன்பே, ஜி-பே போன்ற செயலிகள் வாயிலாக பணம் அனுப்புவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டிஜிட்டல் மூலம்...

இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. டிஜிட்டல் மூலம் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவது, மளிகை கடைகள், வணிக வளாகங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு பொருட்களை அனுப்பி அதற்கான பணத்தை அந்த கடைகளின் உரிமையாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்புவது போன்ற விஷயங்களை கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் இதுகுறித்து கண்காணிக்கும்படி ரிசர்வ் வங்கி மற்றும் யு.பி.ஐ. செயலி நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடந்த 2 மாதங்களாக இதுபோல் ஏதேனும் பணப்பரிமாற்றம் நடந்ததா? என்பது குறித்து கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படியும் தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கி மற்றும் யு.பி.ஐ. நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பெரும் சவால்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா, 'டிஜிட்டல் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்துள்ளோம். இதுகுறித்து ரிசர்வ் வங்கி மற்றும் யு.பி.ஐ. செயலிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். டிஜிட்டலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது' என்றார்.


Next Story