ஒற்றை காட்டு யானையை விரட்டியடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி


ஒற்றை காட்டு யானையை விரட்டியடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

எச்.டி.கோட்டையில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை விரட்டியடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எச்.டி.கோட்டை

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா அனகட்டி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

கரும்பு, மக்காசோள தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றது. ேமலும் கிராமங்களையொட்டி உள்ள மின்கம்பங்களை சாய்த்தும் அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் துப்பாக்கியுடன் காட்டு யானைைய தேடி வருகிறார்கள். அனகட்டி, நூரலகுப்பே, எலமத்தூர் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் காட்டு யானையை மின்சாரம் தாக்காமல் இருக்க 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் காட்டு யானையின் நடமாட்டத்தை டிரோன் கேமரா உதவியுடன் கண்டறிய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் காட்டு யானையை விரட்டியடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.


Next Story