நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் செய்த தியாகத்தில் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு உள்ளது; பிரதமர் மோடி


நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் செய்த தியாகத்தில் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு உள்ளது; பிரதமர் மோடி
x

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் செய்த தியாகத்தில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கான வரலாறு உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



அமராவதி,



ஆந்திர பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழாவை முன்னிட்டு, 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

"டிஜிட்டல் இந்தியா பாஷினி", "டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்" உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். பீமாவரத்தில் உரையாற்றிய பிறகு, ஆந்திராவை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசல கிருஷ்ண மூர்த்தியின் மகள் பசல கிருஷ்ண பாரதியை (வயது 90) சந்தித்து அவரது காலைத்தொட்டு வணங்கினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

அல்லூரி சீதாராமா ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் சுதந்திர போராட்டம் ஒரு சில ஆண்டுகளுக்கான வரலாற்றை கொண்டதில்லை. சில பகுதிகளையோ அல்லது சில மக்களாலோ ஏற்பட்டதல்ல அது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் செய்த தியாகத்தின் வரலாறு அது என கூறியுள்ளார்.

அல்லூரி சீதாராமா ராஜூவுக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரதமர் மோடி கூறும்போது, நாட்டின் விடுதலை போருக்காக அவர் முன்பே தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். ஆதிவாசிகளின் நலன்கள் மற்றும் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர். இளம் வயதில் வீரமரணம் அடைந்தவர். அவரது வாழ்க்கை ஓர் உந்துதலாக உள்ளது. இந்திய கலாசாரத்தின் அடையாளம் அவர். ஆதிவாசிகளின் அடையாளம் மற்றும் மதிப்புகளுக்குரியவர் என கூறியுள்ளார்.

சுதந்திர போராட்டத்திற்காக திரளாக இளைஞர்கள் ஒன்று கூடியது போன்று, நாட்டின் கனவுகளை நனவாக்கவும் அவர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி இளைஞர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.


Next Story