டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 'இந்தியா' கூட்டணி கூட்டம் தள்ளிவைப்பு


டெல்லியில் இன்று நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி கூட்டம் தள்ளிவைப்பு
x

இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்திருந்தனர்.

புதுடெல்லி,

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி கூட்டத்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் வீட்டில் இன்று (புதன்கிழமை) நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் 'இந்தியா' கூட்டணியின் டெல்லி கூட்டத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொள்ள மாட்டார்கள் என அந்த கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. 'மிக்ஜம்' புயல் பாதிப்பு நிலவரம் காரணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நலக்குறைவால் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று தகவல் வெளியானது.

3 மாநில தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரசுடன் சில இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடும் அவற்றின் தலைவர்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டாததன் பின்னணி காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை இம்மாதம் 3-வது வாரத்துக்கு தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், 14 உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு இன்று (புதன்கிழமை) கார்கே வீட்டில் கூடிப்பேசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story