ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு.!
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
காந்திநகர்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி அப்போது பேசியிருந்தார்.
இந்த பேச்சை தொடர்ந்து மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேவேளை, இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் தலைமை நீதித்துறை நடுவரார் எச்.எச்.வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அவர் ராஜ்கோட் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.