கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம் - வெளியான சூப்பர் அறிவிப்பு
கர்நாடகாவில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் 5 கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கிலோவுக்கு 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும். இது தற்காலிக ஏற்பாடு மற்றும் அரிசி கொள்முதல் செய்யும் வரை மாற்று வழி என்று சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.