12 சிறுமிகளை திருமணம் செய்து விபசாரத்திற்கு விற்ற கொடூர பின்னணி...
பீகாரில் 12 சிறுமிகளை திருமணம் செய்து விபசார தொழிலில் தள்ளி, விற்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பூர்னியா,
பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் அனார்கலி கிராமத்தில் வசித்து வருபவர் முகமது ஷம்ஷத் என்ற மனோகர் (வயது 32).
இவர் உயர் படிப்புக்காக படித்து வந்துள்ளார். அவரை அனகார் பகுதியை சேர்ந்த போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர். ஷம்ஷத் சிறுமிகள் உள்பட பலரை திருமணம் செய்து பின்னர் அவர்களை விற்றுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 25ந்தேதி தனது மைனர் மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, ஷம்ஷத் கடத்தி சென்று விட்டார் என சிறுமியின் தந்தை முகமது ஹசீப் என்பவர் அனகார் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் தேடி வந்தனர். இறுதியில் கிஷன்கஞ்சின் எல்.ஆர்.பி. சவுக் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டனர். ஆனால், ஷம்ஷத் சிக்காமல் தப்பி விட்டார். தொடர்ந்து அவரை தேடி போலீசார் அலைந்தனர்.
இந்நிலையில், போலீசார் கைது செய்த ஷம்ஷத், விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இதுவரை ஷம்ஷத் 8 சிறுமிகள் உள்பட 12 பேரை மணந்துள்ளார். அவர்களிடம் தன்னை திருமணம் ஆகாதவர் என கூறி அறிமுகம் செய்து கொள்வார். திருமணம் முடிந்த பின்பு அவர்களை விபசார தொழிலில் தள்ளியுள்ளார்.
அவரிடம் சிக்கிய அனைவரும் முஸ்லிம் சமூகத்தினர் என ஷம்ஷத் கூறியுள்ளார். கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் தாகுர்கஞ்ச் என்ற சிவப்பு விளக்கு பகுதியில் சிறுமிகளை விபசாரத்திற்கு தள்ளும் வழக்கம் கொண்டுள்ளார்.
இதன்பின்னர் நிறைய பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த சிறுமிகளை மேற்கு வங்காளத்தில் விற்று உள்ளார். 12 சிறுமிகளில் 2 பேர் அனகார் காவல் நிலைய பகுதியையும் மற்றும் 10 பேர் கிஷன்கஞ்ச் மாவட்டத்திலும் வசித்தவர்கள் ஆவர். அனைத்து சிறுமிகளையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.