கொள்ளை அடிக்க போன இடத்தில் வியாபாரியை கட்டி போட்டு, மனைவி, மகள் பலாத்காரம்; கும்பல் அட்டூழியம்
உத்தர பிரதேசத்தில் கொள்ளை அடிக்க போன இடத்தில் வியாபாரியை கட்டி போட்டு, மனைவி, மகள் 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது.
ராம்பூர்,
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சைப்னி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிலாரி சாலை பகுதியில் வசித்து வருபவர் ஷா முகமது. இவர் போலீசில் நேற்று புகார் ஒன்றை அளித்து உள்ளார்.
அதில், 3 கொள்ளைக்காரர்கள் கொண்ட கும்பல் ஒன்று, அத்துமீறி நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்குள் நுழைந்து, அவரையும், அவரது குடும்பத்தினரையும் அறை ஒன்றில் கட்டி போட்டு உள்ளனர்.
இதன்பின் ரூ.5 ஆயிரம் பணம், ஒரு மொபைல் போன் மற்றும் சில விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின்னர், போலீசிடம் மீண்டும் வந்த அந்நபர், கொள்ளை சம்பவத்தின்போது, குற்றவாளிகள் அவரது மனைவி மற்றும் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். அதனை குறிப்பிட மறந்து விட்டேன் என கூறியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, போலீஸ் சூப்பிரெண்டு அசோக் குமார் சுக்லா தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். தேவையான உத்தரவுகளை அதிகாரிகளுக்கு, எஸ்.பி. அசோக் பிறப்பித்து உள்ளார்.
புகார் அளித்தவரின் வாக்குமூலம் அடிப்படையில் தற்போது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. புகாரில் கூறப்பட்ட விசயங்களை பற்றி விசாரணை நடந்து வருகிறது. பெண்கள் இருவரின் மருத்துவ பரிசோதனை நடந்து முடிந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலையில், டெல்லியில் இருந்து கான்பூர் நெடுஞ்சாலையில் புலந்த்சாகர் மாவட்டத்தின் தோஸ்த்பூர் கிராமத்தில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது.
5 கொள்ளைக்காரர்கள், காரில் சென்ற குடும்பத்தினரை நள்ளிரவில், கல் வீசி ஓட்டுநரை திசை திருப்பி, வழியை மறித்து, வயலில் கட்டி போட்டனர். இதன்பின்னர், பெண் மற்றும் அவரது 13 வயது மகளை குடும்பத்தினரின் முன்பு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.