காங்கிரஸ் எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறதோ, அவ்வளவுக்கு தாமரை மலரும்: ராஜ்நாத் சிங்


காங்கிரஸ் எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறதோ, அவ்வளவுக்கு தாமரை மலரும்: ராஜ்நாத் சிங்
x

பா.ஜ.க.வுக்கான படுகுழியை அல்ல சொந்த கட்சிக்கான படுகுழியை காங்கிரஸ் கட்சி தோண்டி கொண்டிருக்கிறது என ராஜ்நாத் சிங் இன்று கூறியுள்ளார்.


பெலகாவி,


கர்நாடகாவில் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் மாநிலத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பொது கூட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவா்கள் பஸ் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஆளும் பா.ஜ.க. ஏற்கனவே ஜனசங்கல்ப யாத்திரையை நடத்தியது.

தொடர்ந்து தற்போது விஜய சங்கல்ப யாத்திரையை கடந்த ஜனவரி 21-ந்தேதி தொடங்கியது. கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பொறுப்பாளராக, மத்திய கல்வி, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை ஆகியோரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்துள்ளார்

தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட கட்சியினர் கர்நாடகாவுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பிரசார பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவுக்கு வருகை தந்து உள்ளார். அவர், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் நந்த்கத் கிராமத்தில் பா.ஜ.க.வின் 2-வது விஜய சங்கல்ப ரத யாத்திரையை இன்று தொடங்கி வைத்து பேரணியில் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் புதிதாக ஒன்றை தொடங்குகிறார்கள். அவர்கள் மிக தாழ்ந்து போய் பேசியுள்ளனர். மோடிஜி, உங்களது படுகுழி தோண்டப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள், அவர்களுக்கான படுகுழிகளை தோண்டி கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எவ்வளவுக்கு எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறதோ, அவ்வளவுக்கு தாமரை மலரும் என பேசியுள்ளார்.


Next Story