நாட்டில் தொற்று பாதிப்பு 193 ஆக அதிகரிப்பு... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு


நாட்டில் தொற்று பாதிப்பு 193 ஆக அதிகரிப்பு... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு
x

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு சற்றே அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது.

புதுடெல்லி,

நம் நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு சற்றே அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் 125 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 193 ஆக அதிகரித்தது. இதுவரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 450 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்றின் பாதிப்பில் இருந்து 24 மணி நேரத்தில் 127 பேர் மீண்டுள்ளனர். இதுவரை மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது. தொற்றினால் நேற்று முன்தினம் சண்டிகாரில் ஒருவர் பலியான நிலையில், நேற்று டெல்லியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொரோனா பலி மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 763 ஆக உயர்ந்து இருக்கிறது.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 65 அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனாவில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது.


Next Story