கா்நாடக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 75 ஆக உயரும்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வந்தால் கர்நாடக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 75 ஆக உயரும்.
பெங்களூரு:-
33 சதவீத இட ஒதுக்கீடு
டெல்லியில் நாடாளுமன்ற மன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று புதிய கட்டிடத்தில் தொடங்கிய இந்த கூட்டத்தில் மத்திய அரசு நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது.
இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் இந்த மசோதா எந்த சிக்கலும் இன்றி நிறைவேறியது. மாநிலங்களவையிலும் முழு ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இது சட்டமாக அமலுக்கு வந்தால், அடுத்து நடைபெறும் தேர்தல்கள் மூலம் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மொத்த உறுப்பினர்களில் 33 சதவீதம் பேர் பெண்கள் இருப்பார்கள்.
75 பெண் எம்.எல்.ஏ.க்கள்
கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 75 பேர் பெண்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அமலுக்கு வரும். கடந்த 1962-ம் ஆண்டு முதல் இதுவரை கர்நாடக சட்டசபையில் மொத்தம் 96 பெண்கள் மட்டுமே எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். ஆனால் ஆண்கள் 3,009 பேர் எம்.எல்.ஏ.க்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
10 பேர் மட்டுமே உள்ளனர்
வாக்காளர்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் எண்ணிக்கையும் உள்ளது. தற்போதைய கர்நாடக சட்டசபையில் 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் காங்கிரஸ், பா.ஜனதாவில் தலா 4 பேரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியில் ஒருவரும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் உள்ளனர். ஆனால் மந்திரிசபையில் ஒரே ஒரு பெண் (லட்சுமி ஹெப்பால்கர்) மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.