பா.ஜனதா அரசுக்கு முடிவுகட்ட கர்நாடக மக்கள் உத்தரவாதம்


பா.ஜனதா அரசுக்கு முடிவுகட்ட கர்நாடக மக்கள் உத்தரவாதம்
x

40 சதவீத கமிஷன் பா.ஜனதா அரசுக்கு முடிவுகட்ட கர்நாடக மக்கள் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

பெங்களூரு:-

உத்தரவாத திட்டங்கள்

பிரதமர் மோடி நேற்று கர்நாடக பா.ஜனதா தொண்டர்களிடையே காணொலி மூலம் பேசினார். இதில் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் ஆகியோருக்கு அடுத்ததாக பிரதமர் மோடி தற்போது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். வருகிற 10-ந் தேதி 40 சதவீத கமிஷன் பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர

கர்நாடக மக்கள் உத்தரவாதம் அளிப்பார்கள். ராஜஸ்தான், இமாசல பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களை போல் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த சில நாட்களில் காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவோம்.

ஆபரேஷன் தாமரை

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பா.ஜனதா ஆபரேஷன் தாமரை மூலம் கவிழ்ப்பதற்கு முன் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம். நிலையான ஆட்சியை நடத்தினோம்.

261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதனால் காங்கிரஸ் அளித்துள்ள உத்தரவாத திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்துவோம். ராஜஸ்தானில் நாங்கள் அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்திரா காந்தி நகர வேலை உறுதி திட்டம், சுகாதார உரிமை திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.

பழைய ஓய்வூதிய திட்டம்

சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் காப்பீடு, ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். சத்தீஷ்காரில் ரூ.9 ஆயிரத்து 270 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. ராஜீவ்காந்தி கிசான் நியாய் திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story