ஏழைகளுக்கு எதுவும் இல்லை; 4 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியான பட்ஜெட்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி


ஏழைகளுக்கு எதுவும் இல்லை; 4 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியான பட்ஜெட்:  மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
x

4 மாநில சட்டசபை தேர்தலை கவனத்தில் கொண்டு மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என மல்லிகார்ஜூன கார்கே பேட்டியில் கூறியுள்ளார்.புதுடெல்லி,


நாடாளுமன்ற மக்களவையில் 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து பேசினார். அதில், நமது பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏழைகளுக்கான உணவு திட்டத்துக்கு அடுத்த ஓராண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. 9 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் உலகில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொரோனா காலத்தில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு, யாரும் பசியுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என நாங்கள் உறுதி செய்தோம்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர் எண்ணிக்கை 7 கோடியாக இருமடங்காக அதிகரித்திருப்பது வேலைவாய்ப்பு அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

9.6 கோடி சமையல் கேஸ் இணைப்புகள், 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள், 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. 11.4 கோடி விவசாயிகளுக்கு அவர்களது கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது என பேசியுள்ளார்.

உள்கட்டமைப்புக்கு முதலீடு, பசுமை எரிசக்தி, இளைஞர் நலன்கள் உள்ளிட்ட 7 அம்சங்களை உள்ளடக்கியது இந்த பட்ஜெட் என அவர் குறிப்பிட்டார்.

இந்த பட்ஜெட் பற்றி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பட்ஜெட்டானது, 4 மாநிலங்களில் வரவிருக்கிற சட்டசபை தேர்தலை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்டு உள்ளது.

ஏழை மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. பணவீக்கம் கட்டுப்படுவதற்கான திட்டங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

அரசு காலி பணியிடங்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழான திட்டங்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story