பெண்ணின் உயிரை காப்பாற்றிய, பஸ்சில் விட்டு சென்ற பர்ஸ்
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் விட்டு சென்ற பர்சால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
செகந்திராபாத்,
தெலுங்கானாவில் சங்காரெட்டி மாவட்டத்தில் பதன்செரு பகுதியில் பெண் ஒருவர் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். இதன்பின்பு, செகந்திராபாத் ஜூபிளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
பஸ்சில் அனைவரும் இறங்கிய பின்னர் பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை நடத்துனர் ரவீந்தர் கவனித்து உள்ளார். அதனை எடுத்து, திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
அந்த பர்சில் அதன் உரிமையாளர் விவரங்கள், ரூ.403 பணம் மற்றும் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதனை திறந்து அவர் வாசித்துள்ளார். அந்த கடிதத்தில், தனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும் அதனால் வாழ்வை முடித்து கொள்ள போகிறேன் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.
தொடர்ந்து பர்சில் வேறு ஏதேனும் உள்ளதா? என தேடியதில், இளம்பெண்ணின் ஆதார் அட்டை இருந்துள்ளது. உடனடியாக, ரவீந்தர் இதனை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சஜ்ஜனாருக்கு டுவிட்டர் வழியே தெரிவித்து உள்ளார்.
அதனுடன், தற்கொலை கடிதம் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றினை புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். உடனடியாக சஜ்ஜனார், பெண்ணை அடையாளம் காணும்படி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதன்பின்பு, காவல் துணை ஆய்வாளர் தயானந்த் மற்றும் மரேத்பள்ளி நகர காவலர்கள் உதவியுடன் அந்த பெண் கண்டறியப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சரியான தருணத்தில் செயல்பட்ட நடத்துனர் ரவீந்தர் மற்றும் பிற பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.