சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு


சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:46 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் சாலை அமைக்கும் பணியை ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைந்து முடிக்கும்படி காண்டிராக்டருக்கு உத்தரவிட்டார்.

ஆண்டர்சன்பேட்டை

தினத்தந்தி செய்தி எதிரொலி

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை சர்க்கிளில் இருந்து ரோட்ஜஸ் கேம்ப் வரை சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.

இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதன் எதிரொலியாக நேற்று தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் அங்கு வந்தார். அவர் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட காண்டிராக்டரை அழைத்து பணியை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவது கண்டிக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக அமையும் வகையில், அவருடைய கட்டிடம் பாதிக்காதவாரு சாலை அமைக்கும் பணியும், கால்வாய் அமைக்கும் பணியும் நடந்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமரசம் செய்து கொள்ளக்கூடாது

இதற்காக சம்பந்தப்பட்ட காண்டிராக்டரை அழைத்து கண்டித்துள்ளேன். காண்டிராக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் குறிப்பிட்ட ஒரு நபருக்கு சாதகமாக நடந்து கொள்ள கூடாது. இந்த விஷயத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகரசபை அதிகாரிகள், போலீசார் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொதுப்பணியில் ஈடுபடுவோர் யாருக்கும் சாதகமாக இருக்க கூடாது. தற்போது இங்கு நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் யாருடனும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story