புறாவை பிடிக்க சென்ற போது மின்சாரம் தாக்கியது; ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மாணவன் சாவு


புறாவை பிடிக்க சென்ற போது மின்சாரம் தாக்கியது; ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மாணவன் சாவு
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

புறாவை பிடிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி பலத்த தீக்காயம் அடைந்த பள்ளி மாணவன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தான். மற்றொரு மாணவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு:

புறாவை பிடிக்க சென்றனர்

பெங்களூரு நந்தினி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விஜயானந்தநகர் பகுதியை சேர்ந்த தம்பதியின் மகன் சுப்ரீத் (வயது 11). அதே பகுதியில் வசிக்கும் இவனது நண்பன் சந்தன் என்ற சந்துரு (10). இவர்கள் 2 பேரும் ஒரு பள்ளியில் படித்து வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் இருந்த புறாவை பிடிக்க சுப்ரீத்தும், சந்தனும் சென்றார்கள். ஆனால் மாடிக்கு செல்ல வீட்டு உரிமையாளர் அனுமதிக்கவில்லை.

அப்படி இருந்தும் பக்கத்து வீடு வழியாக வீட்டின் மாடிக்கு சுப்ரீத்தும், சந்தனும் சென்றார்கள். பின்னர் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து உயர் அழுத்த மின்கம்பியில் இருந்த புறாவை பிடிக்க 2 பேரும் முயன்றனர். மின்கம்பியில் இரும்பு கம்பி பட்டதால், சுப்ரீத், சந்தனை மின்சாரம் தாக்கியது. இதில், 2 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். சுப்ரீத்துக்கு 80 சதவீத தீக்காயமும், சந்தனுக்கு 60 சதவீத தீக்காயமும் ஏற்பட்டு இருந்தது.

மாணவன் சாவு

அவர்கள் 2 பேருக்கும் விக்டோரியா ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் சுப்ரீத் பரிதாபமாக இறந்து விட்டான். சுப்ரீத்தின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

மற்றொரு மாணவன் சந்தனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story