வேங்கைவயல் விவகாரம் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு..!


வேங்கைவயல் விவகாரம் தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு..!
x

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பான பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

புதுடெல்லி,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.

எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அல்லது ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், இந்த சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உள்ளது என்றும் ஐகோர்ட்டு இருக்கும்போது சுப்ரீம் கோர்ட்டு இதில் ஏன் தலையிட வேண்டும் என நீதிபதி சஞ்சய் கிஷன் கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சஞ்சய் கிஷன் உத்தரவிட்டார். மேலும் தேவைப்பட்டால் மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை நாடலாம் என நீதிபதி அறிவுறுத்தினார்.


Next Story