பத்ராவதியில் அக்காள் கணவரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்றவர் கைது


பத்ராவதியில் அக்காள் கணவரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்றவர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பத்ராவதியில் சொத்து தகராறில் அக்காள் கணவரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

பத்ராவதியில் சொத்து தகராறில் அக்காள் கணவரை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி பேராசிரியர்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா கல்லிஹால் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா(வயது45). கல்லூரி பேராசிரியராக இவர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நீலம்மா(40). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் என 3 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் ராஜப்பாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து கணவனும், மனைவியும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். ராஜப்பாவுடன் அவரது மகளும், நீலம்மாவுடன் அவரது 2 மகன்களும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நீலம்மாவுக்கு ஆதரவாக அவரது தம்பி அசோக்கும் அவர்களுடன் வசித்து வருகிறார்.

வாடகை வீட்டில்...

தனது அக்காள் நீலம்மா அடிக்கடி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு குறித்து தன்னுடைய தம்பி அசோக்கிடம் கூறி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அசோக், தனது அக்காள் கணவரான ராஜப்பாவை நேரில் சந்தித்து தன்னுடைய அக்காளுக்கு சேர வேண்டிய சொத்து பிரித்து தரும்படி கேட்டு தகராறு செய்து வந்தார். இதனால் ராஜப்பா தனது வீட்டை காலி செய்து கொண்டு, பத்ராவதிக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டி இருந்து தானவாடி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் மீது ஒரு ஆட்டோ மோதியது.

கைது

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜப்பா படுகாயம் அடைந்தார். தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி ஹொலேஹொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் சொத்து தகராறில் ராஜப்பாவை அவரது மனைவியின் தம்பி அசோக் ஆட்டோவை ஏற்றி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அசோக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story