கழுத்தை இறுக்கி புதுப்பெண்ணை கொன்று உடல் வனப்பகுதியில் புதைப்பு; நாடகமாடிய கணவர் கைது


கழுத்தை இறுக்கி புதுப்பெண்ணை கொன்று உடல் வனப்பகுதியில் புதைப்பு; நாடகமாடிய கணவர் கைது
x

சன்னகிரி அருகே வரதட்சணை கொடுமைப்படுத்தி கழுத்தை இறுக்கி புதுப்பெண்ணை கொன்ற உடலை வனப்பகுதியில் வீசி மாயமானதாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு:

வரதட்சணை கொடுமை

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா உப்பிராணி அருகே கங்ககொண்டனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார்(வயது 25). இவருக்கும், தாவணகெரே அருகே உள்ள ஐகூர் கிராமத்தை சேர்ந்த லோகேஷப்பா என்பவர் மகள் சந்திரகலாவுக்கும்(21) கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது சந்திரகலாவின் பெற்றோர், நகை மற்றும் பணத்தை வரதட்சணையாக கொடுத்தனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் மோகன் குமார், சந்திரகலாவை பெற்றோர் வீட்டுக்கு சென்று கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி உள்ளார்.

இதற்கிடையே கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு அவர், மனைவி சந்திரகலா காணாமல் போய்விட்டதாக சன்னகிரி போலீசில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் சந்திரகலாவை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

கொன்று உடல் புதைப்பு

இந்த நிலையில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சந்திரகலாவின் தந்தை லோகேஷப்பா போலீசில் புகார் அளித்து இருந்தார்.

அதன்பேரில் போலீசார், மோகன் குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர், மனைவி சந்திரகலாவை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி அவர், போலீசாரிடம் கூறியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் சம்பவத்தன்று வரதட்சணை கொடுமைப்படுத்திய மோகன்குமார், சந்திரகலாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை அஜ்ஜாம்புரா தாலுகா உணுசேகட்டே பகுதியில் உள்ள வனப்பகுதியில் குழித்தோண்டி புதைத்துள்ளார். பின்னர் அவர், மாயமானதாக நாடகமாடியுள்ளார்.

கைது

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சென்று சந்திரகலாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கைதான மோகன்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story