மதுபான விடுதியில் ரூ.1¼ லட்சம் திருட்டு; காசாளருக்கு போலீஸ் வலைவீச்சு


மதுபான விடுதியில் ரூ.1¼ லட்சம் திருட்டு; காசாளருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே மதுபான விடுதியில் ரூ.1¼ லட்சத்தை திருடி சென்ற காசாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மங்களூரு:

ரூ.1.23 லட்சம் திருட்டு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மோடூர் கோட்டேகார் பகுதியில் சாய் பரிவார் என்ற மதுபான விடுதி உள்ளது. இந்த மதுபான விடுதியில் ஹரீஷ் என்பவர் காசாளராகவும், ஆனந்த் என்பவர் ஊழியராகவும் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசாளர் ஹரீசும், ஆனந்த்தும் மதுபான விடுதியில் இருந்தனா். வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை என தெரிகிறது.

அப்போது, ஊழியர் ஆனந்த் கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு காசாளர் ஹரீஷ், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1.23 லட்சத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காசாளருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து ஊழியர் ஆனந்த், உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் அங்கு வந்து பார்த்தார். பின்னர் இதுகுறித்து உல்லால் போலீசில் உரிமையாளர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மதுபான விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது காசாளர் ஹரீஷ், கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடிவிட்டு தப்பி செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஹரீசை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story