தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் நிறைய ஏக்நாத் ஷிண்டேக்கள் உள்ளனர்; பா.ஜ.க.


தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் நிறைய ஏக்நாத் ஷிண்டேக்கள் உள்ளனர்; பா.ஜ.க.
x

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் நிறைய ஏக்நாத் ஷிண்டேக்கள் உள்ளனர் என பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.



ஐதராபாத்,



தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆட்சி செய்து வருகிறது. தெலுங்கானாவில் பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் கரீம்நகர் எம்.பி.யான பண்டி சஞ்சய் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பா.ஜ.க. தேசிய செயல் குழு கூட்டத்தில் என்ன நடக்கிறது என தெரியும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கூறுகிறார்.

அவருக்கு எப்படி தெரியும்? பா.ஜ.க.வுக்கு எந்தவித செயல் திட்டமும் இல்லை என தெலுங்கானா முதல்-மந்திரியான நீங்கள் கூறியுள்ளீர்கள். பின்னர் எப்படி பா.ஜ.க. 18 மாநிலங்களில் அதிகாரத்திற்கு வர முடிந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பேசிய விதம் வெட்கக்கேடானது. ஜொகுலம்பா அன்னையையும், இந்துமத உணர்வுகளையும் சந்திரசேகர் ராவ் புண்படுத்தி விட்டார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன. அதனாலேயே, உங்களை போன்றோர் இதுபோல் பேசுகின்றனர். கடவுள் ஜொகுலம்பா அன்னைக்கு எதிராக பேசியதற்காக உங்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர இருக்கிறது. முதலில் நீங்கள் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

பெருவெள்ளம் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட பண்ணை வீட்டை விட்டு வெளியே வராத நீங்கள் 18 மணிநேரம் உழைக்கும் பிரதமர் மோடியுடன் உங்களை ஒப்பிடுகிறீர்கள். இதனை பார்த்து ஒவ்வொருவரும் சிரிக்கிறார்கள் என கூறியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே பற்றி சந்திரசேகர ராவ் குறிப்பிட்டதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சஞ்சய், முதலில் உங்களுடைய கட்சியை பாருங்கள். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் கூட நிறைய ஷிண்டேக்கள் உள்ளனர் என நான் நினைக்கிறேன்.

அதனாலேயே அவரை பற்றி பல முறை சந்திரசேகர ராவ் பேசி வருகிறார். அவரது சொந்த கட்சியிலேயே பல ஷிண்டேக்கள் வளர்ந்து வருவது கண்டு அவர் பயந்து போயுள்ளார் போலும் என கூறியுள்ளார்.

அவரது கட்சியில் யார் வேண்டுமென்றாலும் ஏக்நாத் ஷிண்டேவாக வரலாம். அவரது மகன் கே.டி.ஆர்., மகள் கவிதா அல்லது மருமகன் ஹரீஷ் ராவ் கூட இருக்கலாம் என்றும் சஞ்சய் கூறியுள்ளார்.


Next Story