காதலுக்கு வயதில்லை... 10-ம் வகுப்பு மாணவருடன் காணாமல் போன 26 வயது ஆசிரியை
தெலுங்கானாவில் மாணவரும், ஆசிரியையும் ஒரே நாளில் காணாமல் போன பதற்றத்தில் குடும்பத்தினர் தனித்தனியாக புகார் அளித்தனர்.
கச்சிபவுலி,
தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் சந்தாநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 26 வயது ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்து உள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது பேத்தியை காணவில்லை என கூறி ஆசிரியையின் தாத்தா போலீசில் புகார் அளித்து உள்ளார். இதேபோன்று 10-ம் வகுப்பு படித்து வரும் தங்களது மகனை காணவில்லை என்று மாணவர் ஒருவரின் பெற்றோரும் போலீசாரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதனால், அவர்கள் கடத்தப்பட்டு விட்டார்களா? உள்ளிட்ட பல கோணங்களில் போலீசாரும் காணாமல் போன அவர்களை தேடும் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 2 நாள் கழித்து ஆசிரியையின் தாத்தா தனது புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். மாணவரின் பெற்றோரும் தங்களது புகாரை திரும்ப பெற்றுள்ளனர்.
ஆசிரியை திரும்பி வந்து விட்டார் என தாத்தாவும், மாணவர் திரும்பி விட்டாரென பெற்றோரும் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதன்பின்னரே, அவர்கள் 2 பேரும் காதல் வசப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக சென்ற விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதன்பின்னர், அவர்கள் இருவரையும் அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினர். அதன்பின் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதன் எதிரொலியாக, ஆசிரியைக்கு ஒரு மணமகனை பார்த்து வருகிற நாட்களில் திருமணம் செய்து வைப்பது என அவரது குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளனர்.