'காதலுக்கு கண் இல்லை' - கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


காதலுக்கு கண் இல்லை - கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x

காதலுக்கு கண்கள் இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு

மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நிசர்கா(வயது 19). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் அந்த கல்லூரியில் டிரைவராக வேலை செய்த நிகில்(26) என்பவருடன் நிசர்காவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஆனால் காதலுக்கு நிசர்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம்(மே) 13-ந் தேதி நிசர்கா திடீரென மாயமானார். மாயமான நிசர்காவை மீட்டு தரும்படியும், நிசர்காவை, நிகில் கடத்தி சென்று இருக்கலாம் என்றும் கூறி நிசர்காவின் தந்தை நாகராஜ் கர்நாடக ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வீரப்பா, ஹேமலேகா முன்னிலையில் நடந்தது.


இந்த நிலையில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் வசித்து வந்த நிசர்கா, நிகிலை போலீசார் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நிசர்கா தனக்கு 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதாகவும், எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவு என்னுடையது என்றும் கூறினார். மேலும் தனக்கும், நிகிலுக்கும் திருமணம் முடிந்து விட்டது என்றும், இனி தன் கணவருடன் தான் வாழ்வேன் என்றும் கூறிய நிசர்கா பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதிகள், குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்களது உயிரை தியாகம் செய்யவும், பெற்றோருக்காக குழந்தைகள் தங்கள் உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றனர் என்பதை நமது வரலாறு வெளிப்படுத்துகிறது.

பெற்றோர்-குழந்தைகள் இடையே அன்பு, பாசம் இருந்தால் குடும்பத்தில் விரிசல் ஏற்படாது. இந்த வழக்கில் பெற்றோரின் அன்பை விட காதல் சக்தி வாய்ந்த ஆயுதம் என்பது வெளிப்படுகிறது. காதலுக்கு கண் இல்லை என்று நீதிபதிகள் கூறினர். மேலும் நாகராஜின் ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.


Next Story