'கோவில் கட்டுமானம் முடிந்த பிறகுதான் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என எந்த விதியும் இல்லை' - வி.எச்.பி. தலைவர்
நேருவின் ஆட்சிக்காலத்தில் சோமநாதர் கோவிலின் கட்டுமானம் நிறைவடையாமல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக அலோக் குமார் தெரிவித்தார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பா.ஜ.க.வின் அரசியல் நிகழ்வு என்று காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர். மேலும் கோவில் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், சிலையை பிரதிஷ்டை செய்வது ஏன்? எனவும் எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், 'கோவில் கட்டுமானம் முடிந்த பிறகுதான் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என எந்த விதியும் இல்லை' என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"இந்து மத சடங்குகளின்படி, கோவில் கட்டுமானம் நிறைவடைந்த பிறகுதான் கடவுள் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என எந்த விதியும் இல்லை. கோவிலின் கருவறை கட்டுமானத்தை முடித்துவிட்டால், அங்கு கடவுளின் சிலையை பிரதிஷ்டை செய்யலாம்.
அயோத்தி கோவிலைப் போல் மிகப்பெரிய கோவில்களை கட்டி முடிக்க நீண்ட காலம் ஆகும். தற்போது கோவிலின் தரைத்தளம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அங்குதான் கடவுள் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் சோமநாதர் கோவிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த கோவிலின் கட்டுமானம் நிறைவடையாமல், கருவறை மட்டும் கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்."
இவ்வாறு அலோக் குமார் தெரிவித்தார்.